Sunday, June 3, 2012

மட்டு.தாந்தாமலை கந்தவேள் முருகன் ஆலயத்தினுள் இராணுவ உடையணிந்தோர் அட்டகாசம்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில்,
தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும்.
இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகன்றனர்.
இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டிருந்தேன்.
எனவே இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அணுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.
இதற்கு இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பளிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

tamilfast