Wednesday, April 25, 2012

மிலிந்த மொரகொட மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துகொள்வதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அமைப்பு ஒன்றின் பதவிக்கு தாம் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக தம்மை நியமித்திருந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எந்நேரமும் வழங்குவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் நகர மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, மாநகர சபைக்குள் வலுவான அணியொன்றை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் பெறுபேறாக கொழும்பு மாநகர சபையின் மிகவும் முக்கிய செயற்குழுவான நிதி செயற்குழுவின் தீர்மானமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அணிக்கு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

tamilfast