Wednesday, April 25, 2012

தம்புள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தம்புள்ள பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியரத்ன எதுகல விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளயில் புண்ணிய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தம்புள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு போன்றே அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இனத்தவரையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயற்படுவது அவசியம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், நாட்டு மக்களிடையே, பிரிவினைவாத குழுக்கள் அல்லது சர்வதேச அழுத்தம், சூழ்ச்சி அல்லது வேறு செயற்பாடுகள் ஊடாக குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது தொடர்பாக சரியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து வெளியிட்ட அவர், நெருக்கடியை நிவர்த்திக்கும் பொருட்டு ஜனாதிபதியும் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சியம் மகா நிகாயவின், ரன்கிரி தம்புள்ள விகாரையைச் சார்ந்த ஸ்ரீ சுமங்கல தேரர் கருத்து வெளியிடுகையில். அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பொதுமக்களிடன் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தார்.
எனினும், தவறுகள் இருப்பின் மன்னிப்பு கோருவதற்கு தயாராக இருப்பதாகவும், தம்மால் அவ்வாறான பிழைகள் எதுவும் இழைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், தம்புள்ளையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் தமது நிலைப்பாடுகளை வெளியிடுவதற்கு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தம்புள்ளை சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், பள்ளிவாசல் மீது தாக்கல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

No comments:

Post a Comment

tamilfast