Monday, April 9, 2012

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணை ஏப்ரல் 11- ந்தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இத்தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இத்தடையை நீட்டிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய தீர்ப்பாணையத்திடம் 2010-ம் ஆண்டு வைகோ மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வைகோ கோரியிருந்தார். ஆனால் வைகோவின் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மராஜ், வேணுகோபால் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
விசாரணையின் போது வைகோ, இலங்கையில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பது சரியல்ல. 2010-க்கு பின் விடுதலைப்புலிகளால் இந்தியாவில் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணனும், மத்திய அரசின் வழக்கறிஞர் ரவீந்திரனும் வாதிட்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு இறுதிக் கட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 11ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..

No comments:

Post a Comment

tamilfast