Wednesday, April 11, 2012

கடத்தல் விவகாரம், சிறீலங்கா மீது சேறுபூசும் நடவடிக்கை: தூதரகங்களுக்கு அரசாங்கம் விளக்கம்

குடிவரவு சட்டத்தை மீறியமைக்காக குமார் குணரட்ணம் நாடுகடத்தப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் ஐ.நா. மற்றும் ஐ.நா. முகவர் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே வெளிவிவகார அமைச்சு இதைத் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குமார் குணரட்ணம் தனது பெயரை 3 தடவை மாற்றியுள்ளதாக தென்படுகிறது. முதலாவது பெயரான வன்னிநாயக்க முதியான்ஸலாகே தாஸ்கொன் அவரின் திருமணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டில் அவர்பெற்ற கடவுச்சீட்டில் ரட்நாயக்க முதியான்ஸலாகே தயாலால் என்ற பெயர் உள்ளது.எனினும் அவர் 2011 செப்டெம்பர் 4 ஆம் திகதி இலங்கைக்கு வரும்போது சமர்ப்பித்த அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் நோயல் முதலிகே எனும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவரின் கடந்தகால வரலாறு தொடர்பான விசயங்கள் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பப்படும். இத்தகவல்கள் குணரட்ணத்தையும் அவரின் குடும்ப அங்கத்தவர்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது வெளிவந்தவை.
இடம்பெற்றதாக கூறப்படும் இக்கடத்தல் குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்களானவை அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கருத்திற் கொள்ளத்தக்க சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குணரட்னத்தின் கடத்தல் 2012 ஏப்ரல் 7 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலை 4.10 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இவற்றுக்கிடையில் 12 மணித்தியால இடைவெளி உள்ளது.
திமுது ஆட்டிகலவின் கடத்தல் 2012 ஏப்ரல் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மறுநாளான 7 ஆம் திகதி பிற்பகல் 3.35 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இவற்றுக்கிடையிலான இடைவெளி ஏறத்தாழ ஒரு முழுநாளாகும். உண்மையான கடத்தல்கள் குறித்து மேலும் விரைவாக முறைப்பாடு செய்யப்படும் என்பது வெளிப்படையானதாகும்.
குணரட்ணம் குறித்த கதையில் உறுதிப்படுத்தல்கள் இல்லை. அது நம்பத்தன்மையிலிருந்து கணிசமானளவு விலகியிருக்கும் பல பலவீனங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அவர் சார்ந்த அரசியல் குழுவினால் திட்டவட்டமான நபருக்கு அக்கறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ள போதிலும் அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சமயத்தில் பகுதியளவில் கட்டப்பட்ட வீடொன்றின் மேல்தளத்திலுள்ள அறையொன்றில் தங்கியிருந்தார். அவ்வீடு நீண்டகாலமாக ஆட்கள் வசிக்காததாகும்.
குணரட்ணத்தின் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பகிரங்கமாக பல கருத்துக்களை வெளியிட்ட அவரின் மனைவி, 2006 நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் தனது கணவர் தன்னுடன் வசிக்கவில்லை எனவும் அவர் எங்கே உள்ளார் என்பது தனக்குத் தெரியாது எனவும் திட்டவட்டமாக பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
குணரட்ணம் 5 மாதங்களுக்கு மேலாக, இந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரின் விஸா 5 மாதங்களுக்கு முன் காலாவதியாகியுள்ளது.
இந்த அரசாங்கமானது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாகும் என்பதை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட விரும்புகிறது. கொந்தளிப்புத் தன்மையான குற்றச்சாட்டுகளானவை முறையாக உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அமைவது முக்கியமானதாகும்.
எந்தவொரு நபரும்தான் தனிப்பட்ட காரணங்களுக்காக சார்ந்த சமூகத்திலிருந்து தன்னை வாபஸ்பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தால், அல்லது வேண்டுமென்றே அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்த முற்பட்டால், அங்கே ஒரு கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்து அரசாங்கத்தை நோங்கி விரல் நீட்டுவது அநீதியானதாகும். பல தடவை இவ்வாறு இடம்பெற்றுள்ளன. இது சர்வதேச மன்றங்களில் இலங்கையை இலக்குவைக்கும் நோக்குடையதாகும்.
ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவை உணர்வுகள், ஊகங்கள், மற்றும் வசைமாரிகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளன. இத்தகைய தீயநோக்கம் கொண்ட பொறுப்பற்ற பிரசாரங்களுக்கான ஆட்சிப் பிரதிபலிப்புகளுக்கான அளவீடுகளானவை பாரபட்சமின்மையும் அடிப்படை நியாயத்தன்மையுமாக இருக்க வேண்டுமென அரசாங்கம் கோருகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

tamilfast